புதன், 18 மார்ச், 2020

கனா காணும் காலங்கள்

ஓரே கோட்டில் தான் தொடங்கினோம்
பந்தயம் முடிக்கையில். 
பல பேரைக் காணவில்லை...

      நடந்து முடிந்த 71 வது குடியரசு தின விழாவில் பங்கேற்று வீடு திரும்பும் நேரத்தில்  மேற்சோன்ன வரிகள் தான் எந்தன் நெஞ்சில் நிழலாடின.ஏனென்றால் அன்றைய தினம் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.தேர்விற்கு மட்டுமே வருகின்ற மாணவர்கள் இருக்கின்றனர். பொழுதுபோக்கிற்காக வருகின்ற மாணவர்கள் இருக்கின்றனர். 

   கொஞ்சம் பின்னோக்கி பார்க்கின்றேன்... 
என்னுடைய பள்ளி நினைவுகளை.... 
நினைத்தாலே இனிக்கும் துள்ளித்திரிந்த காலங்கள் அவை. 

என்னுடைய பால்யத்தை படம் பிடித்துக் காட்டுகிறேன் வாருங்கள். 

எங்கள் பள்ளி வளாகத்தில் சிவப்பு நிறத்தில் பூத்து குலுங்கிய கொன்றை மரத்தின் சண்டை காய்களை வைத்து மட்டுமே சண்டையிட்டுக் கொண்டோம். அப்படியே சண்டை என்றாலும், ஹார்லிக்ஸ் மிட்டாய்களுக்கும் ஆரஞ்சு மிட்டாய்களுக்கும் பழம் விட்டுக் கொண்டோம். 

ஹேர்ஸ்டைல் (Hair style)  மாற்றிக்கொண்டால் வாழ்க்கையை மாற்றலாம் என்று ஒருபோதும் நாங்கள் நினைத்ததே இல்லை. 

சினிமா நட்சத்திரங்களை எங்களின் ஆதர்ச நாயகனாக (hero)  நினைத்துகூட பார்த்ததில்லை.
 மாறாக எங்களின் எதிர்காலமே அவர்களின் வாழ்க்கையாக நினைத்து அல்லும் பகலும் அயராது உழைக்கும் எங்கள் அப்பாவவே இப்போது வரை எங்கள் நாயகன். 

உண்மையான தமிழ் ஆர்வத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தையும், கைகளில் உள்ள ரோமங்கள் சிலிர்க்கும் அளவிற்கு தேசியகீதத்தையும் பாடினோம். 

ஆறாம் வகுப்பு படிக்கும் போது தெய்வானை மிஸ்...

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ, - புள்ளினம் தம்
கைச் சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கௌவை உடைத்து அரோ
நச்சிலை வேல் கோக் கோதை நாடு
என்ற பாடலை பாடும்போது, கண்முன்னே தீப்பற்றி எரியும் குளத்தை கண்கள் விரிய கற்பனை செய்து கொண்டோம் 


பண்புமிக்க செல்வந்தர் வீட்டுக் குழந்தை, புலவர் ஒருவருக்கு, தன்கையில் இருந்த நடைவண்டியை கொடைப் பொருளாக கொடுத்ததாம். 
உள்ளம் சிலிர்த்த புலவர் "நடை கற்கும் முன்னே, கொடை கற்றாயே" என்று பாடினாராம். இதை எங்கள் நடேசன் அய்யா சொல்லக் கேட்டுத்தான், பள்ளிக்கு குழந்தையாக வந்த நாங்கள் மனிதனாக பிறந்தோம் வகுப்பறையில். 

ஆம்! 
தாயின் கருவரையில் குழந்தையாக பிறக்கின்றோம். பள்ளியின் வகுப்பறையில் தானே மனிதனாக பிறக்கின்றோம்.! 

எட்டாம் வகுப்பு படிக்கும் போது எட்டாம் வகுப்பு மாணவனின் மனதோடும், பனிரெண்டாம் வகுப்பில் பனிரெண்டாம் வகுப்பு மாணவனின் மனதோடும் இருந்தோம். 


ஆம், அந்தந்த வயதில் அந்தந்த வயதிற்க்கான மனதோடு வாழ்வதும் ஓர் வரம் என்றால், அந்தந்த வயதிற்க்கான மனதை தொலைப்பது சாபம்தானே. 


புத்தக பைகளோடு கனவுகளையும் சுமந்து திரிந்தோம். 

பள்ளியில்  எங்களுக்கான வாழ்கையைத் தேடினோமே தவிர, வாழ்க்கை துணையை அல்ல. 

இப்படி பள்ளியின் நினைவுகள் ஏராளம். கரும்பலகையின் கீழ் உதிரும் சாக்பீஸ் துகள்களின் எண்ணிக்கையைவிட,பள்ளியின் நினைவுகள் ஏராளனமானவை. 


ஒரு வண்ணத்துப்பூச்சியை தொட்டதும் அதன் வண்ணங்கள் கைகளில் ஒட்டிக் கொள்வதைப் போலவோ... 


ஆரஞ்சு மிட்டாயை சாப்பிட்டதும் அதன் நிறம் நம் நாவில் ஒட்டிக்கொள்வதைப் போலவோ எங்களின் பள்ளி சார்ந்த இனிமையான நினைவுகள் எங்களோடு ஒட்டிக்கொண்டுள்ளன. 


உதிரும் நாணயங்களை பொறுக்கும் சிறுவனைப்போல.,ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வருகை தந்து பள்ளி பற்றிய நினைவுகளை சேகரித்து வைத்து உள்ளேன். யாருமற்ற தனிமைகளிலும், தூக்கமில்லாத இரவுகளிலும் அந்த நாணயங்களை எடுத்து வருடிப் பார்பேன். 

எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. எட்டாம் வகுப்பு படிக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் ஒருநாளும், பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வில் என் தந்தை தவரியபோது மட்டுமே பள்ளிக்கு விடுப்பு எடுத்து கொண்டேன். 

"நாள்தோறும் பள்ளிக்கு வருகை தந்து ..."என்று நாள்தோறும் நாம் கூறும் உறுதிமொழிகள் ஒன்றுமில்லாத வெறும் வார்த்தைகளாக காற்றில் கரைந்து கொண்டு இருக்கின்றது மாணவர்களே!!! 

மீண்டும் திரும்ப முடியாதது 
தாயின் கருவரை மட்டுமல்ல. 
பள்ளியின் வகுப்பறையும் தான்.

ஒரு தாய்கூட தன் பிள்ளையை பத்து மாதங்கள் தான் சுமக்கின்றாள். எனில் பல வருடங்கள் நம்மை சுமக்கும் பள்ளியும் தாய் தானே மாணவர்களே.??? 

எனில், உங்கள் தாயை இவ்வளவு தான் நேசிக்கின்றீர்களா? மாணவர்களே!!! 
என்ற கேள்வியோடு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். நன்றி! 

(ஜனவரி மாதம் 28 ஆம் நாள், எங்கள் பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் பேசியது).