புதன், 18 மார்ச், 2020

கனா காணும் காலங்கள்

ஓரே கோட்டில் தான் தொடங்கினோம்
பந்தயம் முடிக்கையில். 
பல பேரைக் காணவில்லை...

      நடந்து முடிந்த 71 வது குடியரசு தின விழாவில் பங்கேற்று வீடு திரும்பும் நேரத்தில்  மேற்சோன்ன வரிகள் தான் எந்தன் நெஞ்சில் நிழலாடின.ஏனென்றால் அன்றைய தினம் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.தேர்விற்கு மட்டுமே வருகின்ற மாணவர்கள் இருக்கின்றனர். பொழுதுபோக்கிற்காக வருகின்ற மாணவர்கள் இருக்கின்றனர். 

   கொஞ்சம் பின்னோக்கி பார்க்கின்றேன்... 
என்னுடைய பள்ளி நினைவுகளை.... 
நினைத்தாலே இனிக்கும் துள்ளித்திரிந்த காலங்கள் அவை. 

என்னுடைய பால்யத்தை படம் பிடித்துக் காட்டுகிறேன் வாருங்கள். 

எங்கள் பள்ளி வளாகத்தில் சிவப்பு நிறத்தில் பூத்து குலுங்கிய கொன்றை மரத்தின் சண்டை காய்களை வைத்து மட்டுமே சண்டையிட்டுக் கொண்டோம். அப்படியே சண்டை என்றாலும், ஹார்லிக்ஸ் மிட்டாய்களுக்கும் ஆரஞ்சு மிட்டாய்களுக்கும் பழம் விட்டுக் கொண்டோம். 

ஹேர்ஸ்டைல் (Hair style)  மாற்றிக்கொண்டால் வாழ்க்கையை மாற்றலாம் என்று ஒருபோதும் நாங்கள் நினைத்ததே இல்லை. 

சினிமா நட்சத்திரங்களை எங்களின் ஆதர்ச நாயகனாக (hero)  நினைத்துகூட பார்த்ததில்லை.
 மாறாக எங்களின் எதிர்காலமே அவர்களின் வாழ்க்கையாக நினைத்து அல்லும் பகலும் அயராது உழைக்கும் எங்கள் அப்பாவவே இப்போது வரை எங்கள் நாயகன். 

உண்மையான தமிழ் ஆர்வத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தையும், கைகளில் உள்ள ரோமங்கள் சிலிர்க்கும் அளவிற்கு தேசியகீதத்தையும் பாடினோம். 

ஆறாம் வகுப்பு படிக்கும் போது தெய்வானை மிஸ்...

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ, - புள்ளினம் தம்
கைச் சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கௌவை உடைத்து அரோ
நச்சிலை வேல் கோக் கோதை நாடு
என்ற பாடலை பாடும்போது, கண்முன்னே தீப்பற்றி எரியும் குளத்தை கண்கள் விரிய கற்பனை செய்து கொண்டோம் 


பண்புமிக்க செல்வந்தர் வீட்டுக் குழந்தை, புலவர் ஒருவருக்கு, தன்கையில் இருந்த நடைவண்டியை கொடைப் பொருளாக கொடுத்ததாம். 
உள்ளம் சிலிர்த்த புலவர் "நடை கற்கும் முன்னே, கொடை கற்றாயே" என்று பாடினாராம். இதை எங்கள் நடேசன் அய்யா சொல்லக் கேட்டுத்தான், பள்ளிக்கு குழந்தையாக வந்த நாங்கள் மனிதனாக பிறந்தோம் வகுப்பறையில். 

ஆம்! 
தாயின் கருவரையில் குழந்தையாக பிறக்கின்றோம். பள்ளியின் வகுப்பறையில் தானே மனிதனாக பிறக்கின்றோம்.! 

எட்டாம் வகுப்பு படிக்கும் போது எட்டாம் வகுப்பு மாணவனின் மனதோடும், பனிரெண்டாம் வகுப்பில் பனிரெண்டாம் வகுப்பு மாணவனின் மனதோடும் இருந்தோம். 


ஆம், அந்தந்த வயதில் அந்தந்த வயதிற்க்கான மனதோடு வாழ்வதும் ஓர் வரம் என்றால், அந்தந்த வயதிற்க்கான மனதை தொலைப்பது சாபம்தானே. 


புத்தக பைகளோடு கனவுகளையும் சுமந்து திரிந்தோம். 

பள்ளியில்  எங்களுக்கான வாழ்கையைத் தேடினோமே தவிர, வாழ்க்கை துணையை அல்ல. 

இப்படி பள்ளியின் நினைவுகள் ஏராளம். கரும்பலகையின் கீழ் உதிரும் சாக்பீஸ் துகள்களின் எண்ணிக்கையைவிட,பள்ளியின் நினைவுகள் ஏராளனமானவை. 


ஒரு வண்ணத்துப்பூச்சியை தொட்டதும் அதன் வண்ணங்கள் கைகளில் ஒட்டிக் கொள்வதைப் போலவோ... 


ஆரஞ்சு மிட்டாயை சாப்பிட்டதும் அதன் நிறம் நம் நாவில் ஒட்டிக்கொள்வதைப் போலவோ எங்களின் பள்ளி சார்ந்த இனிமையான நினைவுகள் எங்களோடு ஒட்டிக்கொண்டுள்ளன. 


உதிரும் நாணயங்களை பொறுக்கும் சிறுவனைப்போல.,ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வருகை தந்து பள்ளி பற்றிய நினைவுகளை சேகரித்து வைத்து உள்ளேன். யாருமற்ற தனிமைகளிலும், தூக்கமில்லாத இரவுகளிலும் அந்த நாணயங்களை எடுத்து வருடிப் பார்பேன். 

எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. எட்டாம் வகுப்பு படிக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் ஒருநாளும், பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வில் என் தந்தை தவரியபோது மட்டுமே பள்ளிக்கு விடுப்பு எடுத்து கொண்டேன். 

"நாள்தோறும் பள்ளிக்கு வருகை தந்து ..."என்று நாள்தோறும் நாம் கூறும் உறுதிமொழிகள் ஒன்றுமில்லாத வெறும் வார்த்தைகளாக காற்றில் கரைந்து கொண்டு இருக்கின்றது மாணவர்களே!!! 

மீண்டும் திரும்ப முடியாதது 
தாயின் கருவரை மட்டுமல்ல. 
பள்ளியின் வகுப்பறையும் தான்.

ஒரு தாய்கூட தன் பிள்ளையை பத்து மாதங்கள் தான் சுமக்கின்றாள். எனில் பல வருடங்கள் நம்மை சுமக்கும் பள்ளியும் தாய் தானே மாணவர்களே.??? 

எனில், உங்கள் தாயை இவ்வளவு தான் நேசிக்கின்றீர்களா? மாணவர்களே!!! 
என்ற கேள்வியோடு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். நன்றி! 

(ஜனவரி மாதம் 28 ஆம் நாள், எங்கள் பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் பேசியது). 

சனி, 3 ஆகஸ்ட், 2019

பூமியின் பொக்கிஷங்கள்

     பூமியின் பொக்கிஷங்கள்.   
                      வேற்றுகிரக வாசிகள் மூன்று பேர் பூமிக்கு வந்தனர். பூமியில் மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளிலே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எது,பூமியின் பொக்கிஷமாக இருக்க கூடியது எது? என்பதை கண்டுபிடித்து அவற்றுள் ஒன்றை தாம் வாழும் உலகத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது தான் அவர்கள் வந்த நோக்கம்.

            பணத்தை பார்த்தனர், அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பார்த்தனர், தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை பார்த்தனர். எதிலும் திருப்தியடையாமல் சுற்றி வந்தனர்.வழியில் ஒரு நூலகத்தை சென்றடைகின்றனர்.அங்கு வைக்கப்பட்டிருக்கும் நூல்கள் பற்றி கேட்டறிந்து அவற்றை பார்க்கின்றனர். பூமியின் பொக்கிஷமாக திகழக்கூடியது புத்தகங்களே என்று கண்கள் மின்ன சொல்லிவிட்டு,புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு தாம் வாழும் உலகத்திற்கு செல்கின்றனர்.

           ஆம் உண்மையில் பூமியின் பொக்கிஷமாக திகழ்வது புத்தகங்கள் தானே!

          மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளிலே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் தான்.

    தனக்குள் ஒரு மனிதன் இருக்கின்றான்
உலகிலேயே கெடாத பொருள் தேன். தேனீக்கள் சுவைத்ததனால் கெடாத தேன் கிடைப்பது போல.. அறிஞர்கள் தம் சிந்தனையால் சுவைத்த தேன் போன்ற கெடாத சிந்தனைகள் நிரம்பியது தானே புத்தகங்கள்.

   புத்தகங்கள் சொல்கின்றன....
   "தொட்டுப்பார் நான் காகிதம்
     புரட்டிப்பார் நான் ஆயுதம் "
"மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தூக்க மருந்து,
ஊன்றி படிப்பவர்களுக்கு ஊக்க மருந்து"
புத்தகங்கள் படிப்பதனால் 'புத்தகப்புழு' என்பார்களே என்றென்ன வேண்டாம்.
நினைவில் வைத்துக்.     கொள்ளுங்கள்..                               புழுக்கள் தான் வண்ணத்துப்பூச்சிகளாக சிறகடிக்கின்றன...

      ஜப்பானில் ஒருவரின் எடையானது அவர்தாம் படித்த புத்தகங்களின் எடையே குறிக்கின்றன....

காகிதங்கள் இரண்டு இடங்களில் மதிப்புறுகின்றன.
ஒன்று பணமாகும் போது...
மற்றொன்று புத்தமாகும் போது...

புத்தகங்கள் என்னும் ஜன்னலின் வழியாக தான் அறிவு என்ற அகன்ற வானத்தை பார்க்க முடியும்.

எனவே,

நூலே இல்லாமல் நம்மை கட்டிப்போடும் நூலகத்திற்கு வாருங்கள்...

சாபம் பெற்ற அகலிகையாக நூல்கள் இருக்க...
இராமனாக வந்து தொடுங்கள்.

குறிப்பு :-
       
     2.8.19  அன்று ,எங்கள் பள்ளியின் நூலக பொறுப்பாசிரியராக, இறைவணக்க கூட்டத்தில் பேசியது.

திங்கள், 20 மே, 2019

சின்ன விஷயங்களின் மனிதன்

சின்ன விஷயங்களின் மனிதன்.
-------------------------------------------------------
                    மஞ்சள் அரளி பூக்கள் ஒருபுறம்,பத்ராட்சி பூக்கள் மறுபுறமும்,பின்புறம் நித்திய கல்யாணியும் பூத்திருக்கின்ற இடத்தில் உட்கார்ந்து தான் வண்ணதாசனின்"சின்ன விஷயங்களின் மனிதன் "என்கிற புத்தகத்தை வாசிக்க துவங்கினேன். இப்போது யோசித்து பார்த்தால், "நான் ஏன் பூக்கள் நிறைந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன் ?"என்பதற்கு பின்னால் உளவியல் காரணங்கள் இருக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது. அவ்விடத்தில் அமர்வதன் பொருட்டு தனக்குள்ளும் ஓர் மலர்ச்சி ஏற்படும் என்கிற காரணமாக இருக்கலாம்.மலர்ச்சி என்பது மலர்களுக்கு அருகில் அமர்வதாலோ, மழையில் நனைவதாலோ,புத்தகங்களை வாசிப்பதாலோ,பிடித்தமானவருடன் பேசும்போதோ... இப்படி பல விதங்களில் ஏற்படுமெனின்,உலகெங்கிலும் மனிதர்கள் ஏதோ ஒரு மலர்ச்சிக்காக ஏங்குபவர்களாக இருப்பதாகவே தோன்றுகின்றது.
             பொதுவாகவே புத்தகங்களில் பொதுவுடைமையை கடைபிடிப்பவன் நான். நான் வாங்கும் புத்தகங்களில் எதையும் எழுதுபவன் அல்ல, என் பெயரைக்கூட.. அடிக்கோடுகள் கூட இருக்காது. ஆனால் இப்புத்தகத்தில் அப்படி முடியவில்லை.
      " எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் மனது.... இப்போதும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் "
      "எல்லாவற்றிற்கும் மனம் தான் அளவு,
எல்லாவற்றையும் விட மனம் தான் அழகு"
    ஏனோ இது போன்ற வரிகளை அடிக்கோடிட எண்ணி பேனாவை தேடினேன்.லோகிதாவிற்கும் கீர்த்தனாவிற்கும் கோடை விடுமுறை என்பதால்... எழுதப்பட்டும் எழுதப்படாமலும் இருந்த பேனாக்கள் அனைத்தையும்... சாபம் கொண்ட அகலிகையாக எண்ணி.. சாப விமோசனம் அருளியபடியால் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை எழுதுவதற்கு . இறுதியாக கீர்த்தனா தான் ஒரு பேனாவை எடுத்து வந்து தந்தாள். நான் வரிகளை அடிக்கோடிடுவதை கவனித்தவள் ஒலிவாங்கியை (🎤) கையில் வைத்திருப்பவள் போல் என்னிடம் பேட்டி எடுக்க தயாரானாள். பேட்டி பின்வருமாறு...
"வணக்கம் சார்"
"வணக்கம் "
"என்னோட கேள்விகளுக்கு பதில் சொல்றீங்களா சார் "
"கேளுடா செல்லம் "
"எதுக்காக இப்படி underline பண்றீங்க சார் "
"இந்தவரிகளெல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு அதனால... "
"Underline பன்னி என்ன பண்ணுவீங்க சார் "
"அப்பப்போ எடுத்து படிச்சு பார்க்க ஈசியா இருக்கும் "
"ஹோ... ஹோ....."
"உனக்கு கூட இதெல்லாம் சொல்லுவேன் "
"ம்ம்ம் "
"எங்கிட்ட படிக்கிற பசங்களுக்கு கூட சொல்லுவேன் "
""அப்போ 'மயிலிறகு குட்டி போட்டது ' கதையை கூட சொன்னீங்களா சார்""
"ஆமாம் டா....சொல்லி இருக்கேன் "
ஒலிவாங்கியை கீழே போட்டவளாக மடியில் அமர்ந்து,என் கழுத்தை சுற்றி தன் கைகளால் கட்டிக்கொண்டு"வைத்தியை நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு பா"என்றாள்...(பொன மாதம் தான் பிரபஞ்சன் எழுதிய "மயிலிறகு குட்டி போட்டது "என்ற கதையை சொல்லி இருந்தேன்.)
சந்தோஷத்தில் பதிலேதும் சொல்ல வராமல் அனைத்து முத்தம் கொடுத்தேன். அது இரண்டு முத்தங்களாக என்னை வந்தடைந்தது.
       வண்ணதாசன் இப்புத்தகத்தின் அணிந்துரையை இப்படி சோல்லி முடித்திருப்பார்.
       "என் வாழ்வு பெரியதும் இல்லை, சிரியதும் இல்லை. நான் பெரிய மனிதனும் இல்லை சிறிய மனிதனும் இல்லை. சின்ன விஷயங்களின் மனிதன். "
நான் கூட அப்படித்தான்.....

நிலா பார்த்தல்

நிலா பார்த்தல்.
--------------------------                                                                             இரவு உணவு முடிந்து... முற்றத்தில் அமர்ந்தோம். பௌர்ணமி நிலவை பார்த்தும் நிலைகொள்ளவில்லை, கீர்த்தனாவிற்கு.
அப்பா... நிலாவைப்பற்றி ஒரு பாட்டு பாடுங்க பா.... என்றாள்.
"நிலா காய்கிறது.... நேரம் தேய்கிறது.... யாரும் இரசிக்கவில்லையே " ....ன்னு நான் பாடியதும் இன்னும் பரவசமானாள். நிலாவைப்பற்றி நான் ஒன்னு சொல்லட்டா பா.?... என்றாள்.
சொல்லும்மா என்ற என் பதிலை எதிர்பார்க்காமலே தொடர்ந்தாள்.
எவ்ளோதான் மேகம் மறைச்சாலும்...அதைத்தாண்டி பிரகாசிக்கிறது தான் பா... நிலா... என்றாள். அடுத்த ஒரு மணிநேரமும் என்னை பேச விடாமல் அவளேதான் பேசினாள்.
எனக்கு ஏனோ நிலாவையே பார்த்துட்டே இருக்கனும் போல இருக்குப்பா.. என்றாள்.
"நிலாவுல... உங்க முகம் தெரியுது பா"
"அப்படியா? "
"அமாம்பா....நம்ம மனசுல யாரு இருக்காங்களோ அவங்கதான் நிலாவுல தெரிவாங்க" என்று அவள் சொல்லும் போது அவள் கண்கள் நட்சத்திரங்களாக மின்னியதை நானறிவேன்.      உங்களுக்கு யாரோட முகம் தெரியுதுனு கேட்டா என்ன சொல்லறதுன்னு யோசிக்கும் போதே.. மீண்டும் தொடர்ந்தாள்
"அப்பா... வானம் முழுவதும் நிலா இருப்பது மாதிரி தெரியுதுபா "என்றாள்.
"நிலாகூட பேசனும் போல இருக்குப்பா !"என்று அடுக்கிக் கொண்டே போனாள்.
"பேசும்மா" என்றேன் நான் .
"ஹாய் நிலா!" என தொடங்கினாள்.
"அப்பா... நிலாவும் எனக்கு ஹாய் சொல்லுதுப்பா" என்கிறாள்.
நிலாவும் சாப்பிட்டாச்சாம்... சாப்பிட்டதும் மேகத்திருந்து நீர் அருந்தியதாக நிலவே சொன்னதாம். இப்படியாக அவள் நினைவுகள் அனைத்திலும் நிலவே நிரம்பி இருந்தது
நேரம் ஆகுது தூங்க போலாமா என்றதும்...                                        "இங்கேயே நிலாவை பார்த்துட்டு இருக்கலாம் பா என்று கெஞ்சி கேட்கிறாள்.                                    காலையில் நிலா இருக்குமா?
"எங்கே இருக்கும்? "
"மேற்கே "
"எத்தனை மணி வரை இருக்கும்? "
"சூரியன் பிரகாசிக்கும் வரை"
"அப்போ காலையில் சீக்கிரம் எழுப்பி விடரிங்களா? "
"சரி டா ..வா தூங்கலாம் "
காலையில் சீக்கிரம் எழுந்தால் எங்களோடு நீங்களும் பார்க்கலாம் நிலவை.?!

புதன், 12 செப்டம்பர், 2018

பெய்யென பெய்யும் மழை

பெய்யென பெய்யும் மழை! 

                அருள்மிகு பர்வதாம்பிகை உடனுறை பரசுராமேஸ்வரர் ஆலயத்தில் அன்று ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு, எங்கள் உபயம். சிறுவயதில் என் அப்பா "தோடுடைய செல்வியனும்" பொன்னார் மேனியனே"பாடும் போது என்னையும் மீறி கண்ணீர் மல்க நின்றிருக்கின்றேன்.நினைவுகள் பின்னோக்கி அழைத்து செல்ல, தாத்தாவும் அப்பாவும் நின்றிருந்த அதே லிங்கத்தின் முன் நாங்கள் நின்றிருந்தோம். மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடக்க, வெளியில் இருக்கும் நந்திதேவர் மட்டுமிருக்க வெளியில் மழை ஆரம்பம் ஆனது. நல்ல மழை! . மழை விடட்டும் என பாலசுப்பிரமணிய ஐயர் சொல்ல, அனைவரும் முன்மண்டபத்தில் நின்றவாறு அவரவர் நினைவுகள் மழையாய் கரைந்து செல்வதை பார்த்திருந்தோம் . 

"ஏம்பா நந்திக்கு அபிஷேகம் பண்ணல?" என்றாள் கீர்த்தி. 

"இப்ப மழையாக இருக்குல்ல "என்றேன் நான். 

"மழையில நனையாததெல்லாம் ஒரு வாழ்க்கையாப்பா? "என்றவாறு என் விரல்களை பிடித்து மழைக்குள் இழுத்துச் சென்று மகிழ்ச்சியில் நனையவைத்தாள்.

புதன், 8 ஆகஸ்ட், 2018

தாயுமானவன்

     அன்று எட்டாம் வகுப்பு 'அ' பிரிவிற்கு ஆங்கிலப் பாடம். THE MOTHER'S DAY GIFT என்ற கதையை ஆரம்பித்தேன்.                                              "அப்சரா னு ஒரு பெண் இருந்தாளாம்" என்று நான் சொல்ல...
"சார், அப்சரா என்பது பெண் இல்ல சார், அது பென்சில்" னு சுட்டிப் பெண் சுமித்ரா சொல்ல வகுப்பில் ஒரே சிரிப்பு  அலை.
"அப்சரா வும் உங்களைப்போல எட்டாம் வகுப்பு மாணவி தான்.பள்ளியில் அன்று நடந்த வழிபாட்டு கூட்டத்தில் எதிர்வரும் அன்னையர் தினத்தில் அனைத்து மாணவர்களின் அன்னையர் அனைவரும் பள்ளிக்கு அழைத்து வரப்படவேண்டும் என மாணவர்களுக்கு சொல்லப்பட்டது.உடல்முழுவதும் தீயினால் ஏற்பட்ட தழும்புகளை உடைய தம் அன்னையை அழைத்து வந்தால் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளாக நேரிடும் என்று கவலையுடன் வீட்டை அடைந்தாள் அப்சரா. அப்சராவின் கவலையை கேட்டறிந்த அவளின் தாய், தழும்புகள் ஏற்பட்ட காரணத்தை அப்சராவிடம் சொல்ல முற்பட்டார். அப்சரா, கைக்குழந்தையாக இருக்கும் போது அவளை குளிக்க வைக்கும்போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக  ஏற்பட்ட தீ விபத்தில் தன் உயிரை பணயம் வைத்து அப்சராவை காப்பாற்றும்போது ஏற்பட்டது என்றும், அதை நினைத்து ஒருபோதும் தான் வருத்தப்பட்டது இல்லை என்றும் சொல்ல சொல்ல அழுதே விட்டாள் அப்சரா. அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை என்பதை உணர்ந்த அப்சரா,அன்னையர் தினத்தன்று அவளின் அம்மாவை பெருமையோடு அனைவரிடமும் அறிமுகப்படுத்துவதாய் அக்கதை முடியும்.
          ஒவ்வொரு அன்னையும் செய்யும் தியாகங்களை சொல்ல முற்பட்டால் சொற்கள் தீர்ந்து போகும் தானே.
    
      இது எங்கோ நடந்த ஓர் உண்மை சம்பவம். ஒரு காடே பற்றி எரிந்து கொண்டிருந்தது.தொடர் போராட்டத்தால் காட்டுத்தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீயினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக வந்தனர் அதிகாரிகள். அப்போது தான் அந்த ஆச்சர்யத்தை கண்டு உள்ளம் உறைந்து போயினர்.ஒரு தாய் பறவை முற்றிலும் கருகிய நிலையில் நின்றிருந்தது. ஒரு குச்சியால் அதை தட்ட கருகிய சிறகுகள் உதிர்ந்து, உள்ளிருந்து நான்கைந்து குஞ்சுகள் உயிருடன் வெளியே வந்தன தன் உயிரை கொடுத்து தன் குஞ்சுகளை காப்பாற்றிய தாய்மையை தியாகம் என்ற ஒற்றை சொல்லால் உணர்த்திட முடியுமா என்ன?
    இப்படி தாய்மையைப் பற்றி நான் சொல்லும்போதே வகுப்பில் விம்மி விம்மி அழும் குறள் ஒன்று கேட்டது. அழுதது மோகனரூபன் தான். இந்த சிறுவயதிலேயே தாயை இழந்த துயரத்தை,சிறுவயதிலேயே தந்தையை இழந்த என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.தாய்மைக்கான ஏக்கம் கண்ணீராய் வெளிவர, வார்தைகளால் சமாதானம் செய்ய முடியாது என்று உணர்ந்த நான், அவனை என்னோடு அனைத்துக்கொண்டேன். இன்றுமுதல் மோகன ரூபனுக்கு தாயுமானவனாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டதற்கு சாட்சியாக கையில் இருந்த சாக்லேட்டை அவனிடம் கொடுத்து விட்டு வந்தேன்.

ஞாயிறு, 22 ஜூலை, 2018

ஏலேலசிங்கன்

          மின்சாரமில்லாத ஒரு மழை நாளின் இரவு நேரம் அது.இரவு உணவை கிண்ணத்தில் போட்டு அம்மா உருட்டிக் தந்ததை அனைவரும் உண்டோம். காமாட்சி அம்மன் விளக்கின் மிதமான வெளிச்சத்தில், அம்மா, அக்கா, தம்பி, அப்பா மற்றும் நான் என வரிசையாக படுத்துக்கொண்டோம்.அன்று தான் என்னுடைய இலவச பேருந்து பயண அட்டையை தொலைத்திருந்தேன்.அதைத் தொலைத்த காரணத்திற்காக அப்பாவின் அகலமான கை விரல்கள் முதுகில் பதிய அடியும் வாங்கியிருந்தேன். இந்த மாதிரியான நேரத்தில் தான் ஏலேலசிங்கன் கதையை அப்பா சொல்ல ஆரம்பித்தார். மழையில் முளைப்பது விதை மட்டுமல்ல கதையும் தான். இதோ கதை...
           ஒரு நாட்டை ஏலேலசிங்கன் என்ற மன்னன் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அவரது அரசவையில் ராஜகுரு ஒருவர் இருந்தார். ஒவ்வொரு நாளும் அவரிடம் அறிவுரைகளை கேட்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தான் அரசன். அன்றும் அரசவை கூடியது. அரசனின் சம்மதத்தோடு ராஜ குரு பேசத்தொடங்கினார். பல்வேறு அறநெறிகளை சொல்லிய குரு "நம்முடையது என இருக்கும் எதுவும் நம்மை விட்டு போகாது" என்ற வரியை அரசனிடம் கூறினார். அரசனுக்கு அவர் சொல்லியதை சோதித்து பார்க்க வேண்டும் எண்ணம் வர.,அரசவையின் ஆஸ்த்தான தலைமை பொற்க்கொல்லனை வரச்சொன்னார். அவனிடம் அரசு கஜானாவில் உள்ள அனைத்து தங்கத்தையும் உருக்கி  ஒரேயொரு தங்க கட்டியாக செய்து அதில் அவனது பெயரையும் பொறிக்க உத்தரவிட்டான். தளபதியிடம் அந்த தங்க கட்டியை கொடுத்து அதை நடுக்கடலில் போட உத்தரவிட்டார்.தளபதியும் அவ்வாறே செய்தார். நாட்கள் நகர்ந்தன. சிறிது காலத்திற்கு பிறகு அந்நாட்டின் மீனவன் ஒருவனுக்கு மிகப்பெரிய மீன் ஒன்று வலையில் விழுந்தது. அப்பெரிய மீனை யாரும் வாங்கவில்லை என்று கவலையில் ஆழ்ந்தான் அவன். மற்றுமொறு மீனவ நண்பன் மீனை வாங்க அந்நாட்டு அரசனால் மட்டுமே முடியும் என்று கூற.,மீனை எடுத்துக்கொண்டு அரசனிடம் முறையிட அரசனும் அவனுடைய மீனை வாங்கி அதை சமையல் அறைக்கு அனுப்பி வைத்தார்.மீனை வெட்டியவர்கள் மீனின் வயிற்றில் செவ்வக வடிவ பாசி படிந்த கல் இருப்பதைப் பார்த்து அதை துணிதுவைக்கும் இடத்தில் போட்டனர்.நாளாக நாளாக அந்த கல்லின் மீது இருந்த பாசி மறைய மறைய அந்த கல்லானது தங்கமாக மின்ன அதில் மன்னனின் பெயரும் தெரிய வந்தது. அதை மன்னனிடம் சமர்பிக்க நடந்தவை எல்லாம் புரிந்தது அரசனுக்கு. அன்று ராஜகுரு சொன்னவை உண்மை என அரசன் உணர்ந்தான்.
                என்று கதையை அப்பா முடிக்கும் போது கண்ணுக்கு தெரியாத சிறகுகள் எனக்கு முளைத்திருந்ததை என்னை தவிர யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.இப்போது ஏதாவது தொலையும் போது ஏலேலசிங்கன் எட்டிப்பார்த்து போகிறார் தான்.இன்று கீர்த்தனா ஆசைப்பட்டு வாங்கிய மையூற்று பேனா தொலைந்து போனதாக வீட்டுக்கு வந்தது முதல் அழுது கொண்டே இருந்தாள். அவளை அழைத்து ஏலேலசிங்கன் கதையை சொல்லித்தான் சமாதானம் செய்ய முடிந்தது.தொலைந்த பேனா கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் கதைகள்தான் நமக்கு அன்பையும் ஆறுதலையும் தந்திருக்கின்றன என்பது உண்மைதானே,!.