புதன், 12 செப்டம்பர், 2018

பெய்யென பெய்யும் மழை

பெய்யென பெய்யும் மழை! 

                அருள்மிகு பர்வதாம்பிகை உடனுறை பரசுராமேஸ்வரர் ஆலயத்தில் அன்று ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு, எங்கள் உபயம். சிறுவயதில் என் அப்பா "தோடுடைய செல்வியனும்" பொன்னார் மேனியனே"பாடும் போது என்னையும் மீறி கண்ணீர் மல்க நின்றிருக்கின்றேன்.நினைவுகள் பின்னோக்கி அழைத்து செல்ல, தாத்தாவும் அப்பாவும் நின்றிருந்த அதே லிங்கத்தின் முன் நாங்கள் நின்றிருந்தோம். மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடக்க, வெளியில் இருக்கும் நந்திதேவர் மட்டுமிருக்க வெளியில் மழை ஆரம்பம் ஆனது. நல்ல மழை! . மழை விடட்டும் என பாலசுப்பிரமணிய ஐயர் சொல்ல, அனைவரும் முன்மண்டபத்தில் நின்றவாறு அவரவர் நினைவுகள் மழையாய் கரைந்து செல்வதை பார்த்திருந்தோம் . 

"ஏம்பா நந்திக்கு அபிஷேகம் பண்ணல?" என்றாள் கீர்த்தி. 

"இப்ப மழையாக இருக்குல்ல "என்றேன் நான். 

"மழையில நனையாததெல்லாம் ஒரு வாழ்க்கையாப்பா? "என்றவாறு என் விரல்களை பிடித்து மழைக்குள் இழுத்துச் சென்று மகிழ்ச்சியில் நனையவைத்தாள்.

புதன், 8 ஆகஸ்ட், 2018

தாயுமானவன்

     அன்று எட்டாம் வகுப்பு 'அ' பிரிவிற்கு ஆங்கிலப் பாடம். THE MOTHER'S DAY GIFT என்ற கதையை ஆரம்பித்தேன்.                                              "அப்சரா னு ஒரு பெண் இருந்தாளாம்" என்று நான் சொல்ல...
"சார், அப்சரா என்பது பெண் இல்ல சார், அது பென்சில்" னு சுட்டிப் பெண் சுமித்ரா சொல்ல வகுப்பில் ஒரே சிரிப்பு  அலை.
"அப்சரா வும் உங்களைப்போல எட்டாம் வகுப்பு மாணவி தான்.பள்ளியில் அன்று நடந்த வழிபாட்டு கூட்டத்தில் எதிர்வரும் அன்னையர் தினத்தில் அனைத்து மாணவர்களின் அன்னையர் அனைவரும் பள்ளிக்கு அழைத்து வரப்படவேண்டும் என மாணவர்களுக்கு சொல்லப்பட்டது.உடல்முழுவதும் தீயினால் ஏற்பட்ட தழும்புகளை உடைய தம் அன்னையை அழைத்து வந்தால் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளாக நேரிடும் என்று கவலையுடன் வீட்டை அடைந்தாள் அப்சரா. அப்சராவின் கவலையை கேட்டறிந்த அவளின் தாய், தழும்புகள் ஏற்பட்ட காரணத்தை அப்சராவிடம் சொல்ல முற்பட்டார். அப்சரா, கைக்குழந்தையாக இருக்கும் போது அவளை குளிக்க வைக்கும்போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக  ஏற்பட்ட தீ விபத்தில் தன் உயிரை பணயம் வைத்து அப்சராவை காப்பாற்றும்போது ஏற்பட்டது என்றும், அதை நினைத்து ஒருபோதும் தான் வருத்தப்பட்டது இல்லை என்றும் சொல்ல சொல்ல அழுதே விட்டாள் அப்சரா. அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை என்பதை உணர்ந்த அப்சரா,அன்னையர் தினத்தன்று அவளின் அம்மாவை பெருமையோடு அனைவரிடமும் அறிமுகப்படுத்துவதாய் அக்கதை முடியும்.
          ஒவ்வொரு அன்னையும் செய்யும் தியாகங்களை சொல்ல முற்பட்டால் சொற்கள் தீர்ந்து போகும் தானே.
    
      இது எங்கோ நடந்த ஓர் உண்மை சம்பவம். ஒரு காடே பற்றி எரிந்து கொண்டிருந்தது.தொடர் போராட்டத்தால் காட்டுத்தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீயினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக வந்தனர் அதிகாரிகள். அப்போது தான் அந்த ஆச்சர்யத்தை கண்டு உள்ளம் உறைந்து போயினர்.ஒரு தாய் பறவை முற்றிலும் கருகிய நிலையில் நின்றிருந்தது. ஒரு குச்சியால் அதை தட்ட கருகிய சிறகுகள் உதிர்ந்து, உள்ளிருந்து நான்கைந்து குஞ்சுகள் உயிருடன் வெளியே வந்தன தன் உயிரை கொடுத்து தன் குஞ்சுகளை காப்பாற்றிய தாய்மையை தியாகம் என்ற ஒற்றை சொல்லால் உணர்த்திட முடியுமா என்ன?
    இப்படி தாய்மையைப் பற்றி நான் சொல்லும்போதே வகுப்பில் விம்மி விம்மி அழும் குறள் ஒன்று கேட்டது. அழுதது மோகனரூபன் தான். இந்த சிறுவயதிலேயே தாயை இழந்த துயரத்தை,சிறுவயதிலேயே தந்தையை இழந்த என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.தாய்மைக்கான ஏக்கம் கண்ணீராய் வெளிவர, வார்தைகளால் சமாதானம் செய்ய முடியாது என்று உணர்ந்த நான், அவனை என்னோடு அனைத்துக்கொண்டேன். இன்றுமுதல் மோகன ரூபனுக்கு தாயுமானவனாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டதற்கு சாட்சியாக கையில் இருந்த சாக்லேட்டை அவனிடம் கொடுத்து விட்டு வந்தேன்.

ஞாயிறு, 22 ஜூலை, 2018

ஏலேலசிங்கன்

          மின்சாரமில்லாத ஒரு மழை நாளின் இரவு நேரம் அது.இரவு உணவை கிண்ணத்தில் போட்டு அம்மா உருட்டிக் தந்ததை அனைவரும் உண்டோம். காமாட்சி அம்மன் விளக்கின் மிதமான வெளிச்சத்தில், அம்மா, அக்கா, தம்பி, அப்பா மற்றும் நான் என வரிசையாக படுத்துக்கொண்டோம்.அன்று தான் என்னுடைய இலவச பேருந்து பயண அட்டையை தொலைத்திருந்தேன்.அதைத் தொலைத்த காரணத்திற்காக அப்பாவின் அகலமான கை விரல்கள் முதுகில் பதிய அடியும் வாங்கியிருந்தேன். இந்த மாதிரியான நேரத்தில் தான் ஏலேலசிங்கன் கதையை அப்பா சொல்ல ஆரம்பித்தார். மழையில் முளைப்பது விதை மட்டுமல்ல கதையும் தான். இதோ கதை...
           ஒரு நாட்டை ஏலேலசிங்கன் என்ற மன்னன் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அவரது அரசவையில் ராஜகுரு ஒருவர் இருந்தார். ஒவ்வொரு நாளும் அவரிடம் அறிவுரைகளை கேட்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தான் அரசன். அன்றும் அரசவை கூடியது. அரசனின் சம்மதத்தோடு ராஜ குரு பேசத்தொடங்கினார். பல்வேறு அறநெறிகளை சொல்லிய குரு "நம்முடையது என இருக்கும் எதுவும் நம்மை விட்டு போகாது" என்ற வரியை அரசனிடம் கூறினார். அரசனுக்கு அவர் சொல்லியதை சோதித்து பார்க்க வேண்டும் எண்ணம் வர.,அரசவையின் ஆஸ்த்தான தலைமை பொற்க்கொல்லனை வரச்சொன்னார். அவனிடம் அரசு கஜானாவில் உள்ள அனைத்து தங்கத்தையும் உருக்கி  ஒரேயொரு தங்க கட்டியாக செய்து அதில் அவனது பெயரையும் பொறிக்க உத்தரவிட்டான். தளபதியிடம் அந்த தங்க கட்டியை கொடுத்து அதை நடுக்கடலில் போட உத்தரவிட்டார்.தளபதியும் அவ்வாறே செய்தார். நாட்கள் நகர்ந்தன. சிறிது காலத்திற்கு பிறகு அந்நாட்டின் மீனவன் ஒருவனுக்கு மிகப்பெரிய மீன் ஒன்று வலையில் விழுந்தது. அப்பெரிய மீனை யாரும் வாங்கவில்லை என்று கவலையில் ஆழ்ந்தான் அவன். மற்றுமொறு மீனவ நண்பன் மீனை வாங்க அந்நாட்டு அரசனால் மட்டுமே முடியும் என்று கூற.,மீனை எடுத்துக்கொண்டு அரசனிடம் முறையிட அரசனும் அவனுடைய மீனை வாங்கி அதை சமையல் அறைக்கு அனுப்பி வைத்தார்.மீனை வெட்டியவர்கள் மீனின் வயிற்றில் செவ்வக வடிவ பாசி படிந்த கல் இருப்பதைப் பார்த்து அதை துணிதுவைக்கும் இடத்தில் போட்டனர்.நாளாக நாளாக அந்த கல்லின் மீது இருந்த பாசி மறைய மறைய அந்த கல்லானது தங்கமாக மின்ன அதில் மன்னனின் பெயரும் தெரிய வந்தது. அதை மன்னனிடம் சமர்பிக்க நடந்தவை எல்லாம் புரிந்தது அரசனுக்கு. அன்று ராஜகுரு சொன்னவை உண்மை என அரசன் உணர்ந்தான்.
                என்று கதையை அப்பா முடிக்கும் போது கண்ணுக்கு தெரியாத சிறகுகள் எனக்கு முளைத்திருந்ததை என்னை தவிர யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.இப்போது ஏதாவது தொலையும் போது ஏலேலசிங்கன் எட்டிப்பார்த்து போகிறார் தான்.இன்று கீர்த்தனா ஆசைப்பட்டு வாங்கிய மையூற்று பேனா தொலைந்து போனதாக வீட்டுக்கு வந்தது முதல் அழுது கொண்டே இருந்தாள். அவளை அழைத்து ஏலேலசிங்கன் கதையை சொல்லித்தான் சமாதானம் செய்ய முடிந்தது.தொலைந்த பேனா கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் கதைகள்தான் நமக்கு அன்பையும் ஆறுதலையும் தந்திருக்கின்றன என்பது உண்மைதானே,!.

சனி, 19 மே, 2018

கூழாங்கற்கள்

🌹என் வலைப்பூவின் முதல் பூ🌹.                 உங்கள் காதலியின் கடிதத்தை படிப்பதைப் போன்ற கவனத்துடன் இதைப் படிப்பீர்கள் என நம்புகின்றேன்.                   இது என் வானம். இங்கு எந்தவித கட்டணங்களோ கடவுச்சீட்டோ இன்றி நீங்கள் சிறகசைத்து பறக்க அனுமதி அளிக்கிறேன். நான் காட்டும் நிலவை யோ, விண்மீன்களையோ நீங்கள் கண்டு இரசிக்கலாம்.
            "எனக்கு ஒரு செய்தி தெரியும்,
உனக்கொரு செய்தி தெரியும், நாம் இருவரும் அதை பகிர்வதால் நாம் இருவரும் இரண்டு செய்திகளை தெரிந்தவர் ஆகிறோம்" என்பதைப் போன்ற தகவல் பகிர்தலாகவும் இருக்ககூடும்.
        கண்ணப்ப நாயனார் உங்களுக்கு தெரியும் தானே.தான் சமைத்த  நிவேதனத்தை தான் முதலில் சுவைத்து சிவனுக்கு படைத்ததைப்போல நான் சுவைத்த விஷயங்களில் சுவையானவற்றை  உங்களுக்கு படைப்பதாகவும் இருக்கலாம்.
வார்த்தைகளால் மனிதர்களை தொடுவது எவ்வளவு அற்புதமான விஷயம். அதற்காக தான் இந்த ஏற்பாடு. 
       கண்ணதாசன் கூறுவது போல "வாய்புரம் தேனை ஊர்புரம் தருவதாகவும் எண்ணலாம்.இது என் கனவுகளின் மொழிபெயர்ப்பு. நீங்கள் என்னுடைய அலைவரிசையில் ஒத்திசைந்தால் என் மனதின் பாடலை கேட்கக்கூடும்.
என் பதிவுகளைக் கொண்டு என்னை யாரும் மதிப்பீடு செய்ய முற்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் யாராக நினைத்தாலும், அது நானில்லை. 
   ஒரு ஊரில் மிகப்பெரிய களிமண்ணால் செய்யப்பட்ட புத்தர் சிலை இருந்தது.ஒருநாள் கனமழை காரணமாக களிமண் கறைய,ஊர்மக்கள் ஒன்றுகூடி சிலை கறையாமல் இருக்க கூறைகளை வேய்ந்தனர்.சுழற்க்காற்றின் காரணமாக கூறைகள் பலனளிக்காமல் போக,தன் இயலாமையின் கைகளை கட்டிக்கொண்டு ஊரே வேடிக்கை பார்க்க, அந்த அதிசயம் நடந்தது. களிமண் கறையக் கறைய தங்கத்தால் ஆன புத்தர்சிலை வெளித்தோன்றியது. உண்மையில் அது தங்கத்தாலான புத்தர் சிலை என்றும், போர்காலங்களில் எதிரிகளிடமிருந்து சிலையை காப்பாற்ற மேலே களிமண் பூசப்பட்டது என்பதை உணர்ந்தனர். என்னுடைய பதிவுகள் உங்களுக்குள் இருக்கும் தங்கத்தை வெளிக்கொணரும் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
    மாறாக இதுவொரு பயணம்.என் விரல் பிடித்து நீங்கள் என்னோடு நடந்து வரலாம். எதற்காக இந்த பயணம் என்று நீங்கள் கேட்கலாம்.பயணம் செய்கின்ற கற்கள் தானே கூழாங்கற்களாக மாறுகின்றன.வாருங்கள் கூழாங்கற்களாக மாறலாம் ....